தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள கடமங்குடி கிராமத்தில் எழுந்தருளி அருள் பாலித்து வரும் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய பால்குட திருவிழா சிறப்பாக நடைபெற்றது.
கொள்ளிட கரையோரம் அமைந்துள்ள கடமங்குடி கிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்த மாரியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இந்த கோவில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஆகஸ்ட் 20 ம் தேதி குடமுழுக்கு விழா நடைபெற்றது.
இதனையடுத்து கும்பாபிஷேகம் நடைபெற்ற நாளான இன்று (ஆகஸ்ட் 21) பத்தாம் ஆண்டை முன்னிட்டு பால்குட திருவிழா நடைபெற்றது. ஒவ்வொரு ஆண்டும் கும்பாபிஷேகம் நடைபெற்ற தினத்தில் பக்தர்கள் விரதம் இருந்து பூங்கரகம், பால்குடம் மற்றும் தீச்சட்டி எடுத்து வழிபாடு செய்வது வழக்கம்.
கொள்ளிடம் ஆற்றில் இருந்து பூங்கரகம் , தீச்சட்டி பால்குடம் எடுத்து பக்தர்கள் முக்கிய வீதிகள் வழியாக மாரியம்மன் ஆலயத்தை வந்து அடைந்தனர். இதனைத் தொடர்ந்து அம்மனுக்கு பால் மற்றும் பல்வேறு திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது.
இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதனை தொடர்ந்து கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று இரவு மாரியம்மனுக்கு ஊஞ்சல் உற்சவம் நடைபெறும் என கிராம நிர்வாகிகள் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டு சென்றனர்.