தஞ்சாவூர் மாநகராட்சி 51 வது வார்டில் டெங்கு தடுப்பு பணிகள் மற்றும் சிறப்பு முகாம் நடைபெற்றது. தஞ்சை மாநகராட்சி ஆணையர் மகேஸ்வரி அறிவுறுத்தலின்படி மாநகர் நல அலுவலர் டாக்டர் சுபாஷ் காந்தி தலைமையிலான குழுவினர் டெங்கு தடுப்பு பணிகளை மேற்கொண்டனர். 51 வது வார்டு பகுதிகளான ஆரோக்கிய நகர், குறிஞ்சி நகர், முல்லை நகர், மருதம் நகர், நேதாஜி நகர் புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதி உள்ளிட்ட இடங்களில் 11 சிறப்பு குழுக்கள் மூலம் டெங்கு கொசு பரவலை கட்டுப்படுத்தும் வகையில் கூட்டு துப்புரவு பணி மேற்கொள்ளப்பட்டது. தேங்கி கிடந்த பிளாஸ்டிக் கப்புகள், தேங்காய் சிரட்டைகள், டயர்கள், உடைந்த பாத்திரங்கள் ஆகியவை கொசு புழுக்கள் உற்பத்தியாகாத வண்ணம் அகற்றப்பட்டது. மேல்நிலை நீர் தேக்க தொட்டி மற்றும் சிறிய நீர் தேக்க தொட்டிகளில் ப்ளீச்சிங் பவுடர் கொண்டு சுத்தம் செய்யப்பட்டது. மேலும் வீடுகளில் தண்ணீர் குடங்களை மூடி சுத்தமாக வைத்திருக்குமாறு அறிவுறுத்தப்பட்டது. காய்ச்சல் அறிகுறி கண்டவர்களுக்கு மருத்துவர் முத்துக்குமார், லட்சுமண குமார் தலைமையிலான மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர். மேலும் முகாமில் பங்கு பெற்றவர்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது. சாலைகளில் ப்ளீச்சிங் பவுடர் தெளிக்கப்பட்டு, கொசு மருந்து அடிக்கப்பட்டது. அதில் மாநகராட்சி அலுவலர்கள், துப்புரவு பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.