தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள கூப்புளிக்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ளது. இங்கு 54 மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் பள்ளி வளர்ச்சியில் அக்கறை கொண்ட பேரூராட்சி கவுன்சிலர் முகிலன், பள்ளி மேலாண்மைக் குழு, பெற்றோர் ஆசிரியர் கழகம், பெற்றோர்கள், கிராமப் பொதுமக்கள், முன்னாள் மாணவர்கள் இணைந்து ரூபாய் 1 லட்சம் மதிப்பிலான சீர்வரிசைப் பொருட்களை ஊர்வலமாக எடுத்து வந்து பள்ளிக்கு வழங்கினர்.
பீரோ, பிரிண்டர், புரொஜெக்டர், ஏணி, ஸ்டாண்ட், ரேக், தலைவர் படங்கள், கேரம், செஸ் விளையாட்டு உபகரணங்கள், பாய், ஜமுக்காளம், குடம், நோட், பிஸ்கட், வாலி, டம்ளர், மோப் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான பள்ளிக்கு தேவையான பொருட்களை, பேராவூரணி காளி கோவில் அருகில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள், ஆண்கள் உள்ளிட்டவர்கள் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் மேளதாளத்துடன் ஊர்வலமாக எடுத்து வந்து பள்ளிக்கு வழங்கினர்.
அவற்றை, வட்டாரக் கல்வி அலுவலர் கலாராணி, வட்டார வளமைய மேற்பார்வையாளர் கோகுலகிருஷ்ணன், பள்ளித் தலைமையாசிரியர் சரோஜா, உதவி ஆசிரியர் செல்லத்துரை மற்றும் மாணவர்கள் கிராம மக்களுக்கு மலர் தூவி வரவேற்பு அளித்து சீர்வரிசை பொருட்களை பெற்றுக் கொண்டனர்.
தொடர்ந்து கிராம பொதுமக்களுக்கு பள்ளி சார்பில் தேநீர் விருந்து அளிக்கப்பட்டது.