நூறு நாள் வேலைத் திட்டத் தொழிலாளர்களுக்கு மூன்று மாத கால சம்பள பாக்கியை உடனடியாக வழங்கக் கோரியும், 100 நாள் வேலைத் திட்டத்திற்கு நிதி ஒதுக்காமல் தொழிலாளர்களை வஞ்சிக்கும் ஒன்றிய மோடி அரசைக் கண்டித்தும், அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் சார்பில், பட்டுக்கோட்டை தலைமை தபால் நிலையம் அருகே திங்கட்கிழமை மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வி.தொ.ச ஒன்றிய தலைவர் வி. தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தார். வி.தொ.ச ஒன்றியச் செயலாளர் கே. பெஞ்சமின் முன்னிலை வகித்தார்.
இதில், விவசாய தொழிலாளர் சங்க மாநிலச் செயலாளர் வி. மாரியப்பன், மாநிலக் குழு உறுப்பினர் கே. பக்கிரிசாமி, மாவட்டச் செயலாளர் ஆர். வாசு, சிபிஎம் ஒன்றியச் செயலாளர் எஸ். கந்தசாமி கண்டன உரையாற்றினர். வி.தொ.ச ஒன்றியக்குழு உறுப்பினர்கள், நூறுநாள் வேலைத் திட்டத் தொழிலாளர்கள் என 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில், "100 நாள் வேலையை 200 நாளாகவும், கூலியை 600 ரூபாயாகவும் உயர்த்தி வழங்க வேண்டும்.
வேலை அட்டை வைத்திருக்கும் அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும். தொழிலாளர்களை கௌரவமாக நடத்த வேண்டும். தொழிலாளர் நல வாரியத்தை உடனே நடைமுறைப்படுத்த வேண்டும். பழுதடைந்த அரசு தொகுப்பு வீடுகளை புதுப்பித்துத் தர வேண்டும். கேரளாவைப் போல் காங்கிரீட் வீட்டுக்கு ரூ. 10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்" என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.