தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே புதுப்பட்டினத்தில் பட்டுக்கோட்டை அஞ்சல் கோட்டம், ஓம்கார் பவுண்டேஷன் தன்னார்வக் குழு இணைந்து பள்ளி மாணவர்களுக்கு கடல் பசுக்களை பாதுகாப்போம் என்ற தலைப்பிலான விழிப்புணர்வு முகாம் நடத்தினர்.
இந்திய அஞ்சல் துறை சார்பில், தஞ்சாவூர் அஞ்சல் கோட்டத்தில், மாவட்ட அளவிலான அஞ்சல் தலை கண்காட்சி வரும் அக்டோபர் மாதம் 8, 9 தேதிகளில் தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ளது. அதன் ஒரு பகுதியாக புதுப்பட்டினம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, அபு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு தன்னார்வக் குழு மூலம் கடல் பசுக்களின் வாழ்விடம், இனப்பெருக்கம், அதன் தனித்தன்மைகள் குறித்து குறும்படம் மூலம் ஒளிபரப்பி, கடல் பசுக்களை பாதுகாப்பது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மேலும் கடல்பசு சின்னம் அனைத்து மாணவர்களுக்கும் வழங்கப்பட்டது. இதில் ஓம்கார் பவுண்டேஷன் நிர்வாக இயக்குனர் பாலாஜி, ஆசிரியர்கள், அஞ்சல் துறையினர், மாணவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை பட்டுக்கோட்டை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் ரகுராமகிருஷ்ணன் செய்திருந்தார்.