தஞ்சை: மீனவ இளைஞர்களுக்கு பாதுகாப்பு படையில் சேர இலவச பயிற்சி
தஞ்சாவூர் மாவட்டத்தில் மீனவ இளைஞர்களுக்கு இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தமிழக மீனவர்களின் வாரிசுகள் கடலோர காவல் படை, கடற்படை உள்ளிட்ட தேசிய பாதுகாப்பு பணிகளில் சேர்வதற்கு 90 நாட்கள் இலவச சிறப்பு பயிற்சி வகுப்புகளை தமிழக கடலோர பாதுகாப்புக் குழுமம் நடத்தி வருகிறது. பட்டுக்கோட்டை கடலோர பாதுகாப்பு குழும காவல் ஆய்வாளர் மஞ்சுளா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 27 மீனவ கிராமங்களை சேர்ந்த 12 ஆம் வகுப்பில் கணிதம் மற்றும் இயற்பியல் பிரிவில் பயின்று தேர்வில் மொத்த பாடங்களில் கூட்டுத்தொகையில் 50சவீதத்திற்கு மேலும், கணிதம், இயற்பியல் பாடங்களில் தனித்தனியாக 50 சதவீதத்திற்கு மேலும் மதிப்பெண் பெற்று தேர்ச்சியடைந்த மாணவர்களுக்கு, தமிழக அரசால் இலவசமாக பயிற்சி அளித்து, கடற்படை, ராணுவம், மத்திய கடலோர காவல் படை மற்றும் விமானப்படையில் சேர்வதற்கு உதவி செய்யப்படும். 3 மாத பயிற்சி காலத்தில் தங்கும் இடம் உணவு இலவசமாகவும் மாதம் ரூ. 1, 000 உதவித்தொகையும் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க அதிராம்பட்டினம் மற்றும் சேதுபாவாசத்திரம் கடற்கரை காவல் நிலையத்தை அணுகி இந்த அரிய வாய்ப்பை, படித்த மீனவ சமுதாய இளைஞர்கள் பயன்படுத்திக்கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது. விண்ணப்பிக்க 15. 11. 2024 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்" இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.