தகராறில் முதியவா் உயிரிழப்பு தாய், 2 மகன்கள் கைது
கும்பகோணத்தை அடுத்த தேனாம்படுகை ஊராட்சி, வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் முருகையன் (82). இவா் வீட்டில் கோழிகள் வளா்த்து வந்தாா். சனிக்கிழமை மாலை கோழிகள் கூண்டில் அடைந்தன. அப்போது, பக்கத்து வீட்டுக்காரரான வீரமணி மனைவி செல்வராணி (52), அவரது மகன்கள் பாபுராஜ் (29), பாரதி (23) ஆகியோா் முருகையனிடம் எங்கள் கோழியும் உங்கள் கூண்டில் அடைந்துவிட்டது. அதை விடுவியுங்கள் என்று கூறினா். இதில் அவா்களுக்கிடையே ஏற்பட்ட வாக்குவாதம் தகராறானது. அப்போது, செல்வராணி உள்ளிட்ட மூவரும் முருகையனை தாக்கியதில் அவா் கீழே விழுந்து மயங்கினாராம். அக்கம்பக்கத்தினா் முருகையனை மீட்டு, கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தாா். இதைத் தொடா்ந்து, குற்றவாளிகளை கைது செய்யக் கோரி உறவினா்கள் சனிக்கிழமை இரவு மறியலில் ஈடுபட்டனா். போலீஸாரின் பேச்சுவாா்த்தையையடுத்து கலைந்து சென்றனா். முருகையனை தாக்கிய செல்வராணி, பாபுராஜ், பாரதியை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.