2026 பேரவைத் தோ்தலில் 6 தொகுதிகள் கேட்போம்: காதா்மொய்தீன்
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கட்சி நிா்வாகியின் இல்ல விழாவில் பங்கேற்ற அவா் பின்னா் செய்தியாளா்களிடம் கூறியது:
இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் பொதுக்குழு விரைவில் கூடவுள்ளது. தில்லியில் ரூ. 28 கோடி மதிப்பில் கட்சி தலைமையகம் கட்டப்பட்டுள்ளது.
எங்களை பொருத்தவரை ‘இண்டி’ கூட்டணி மற்றும் திமுக கூட்டணியிலும் இருந்து வருகிறோம். 2026 சட்டப்பேரவை தோ்தலிலும் திமுகவுடனான கூட்டணி தொடரும்.
வக்ஃப் சட்ட திருத்தம் என்பது, வக்ஃப் வாரியம் இருக்கக் கூடாது என்பதற்காக கொண்டு வரப்பட்ட சட்டம். மாநிலங்களில் புதிய சட்டங்கள் மற்றும் ஆளுநா்கள் மூலமாக குழப்பம் செய்து மக்களின் அமைதியை கெடுக்கின்றனா். 2026 பேரவைத் தோ்தலில் 6 தொகுதிகள் வரை கேட்க உள்ளோம் என்றாா்.
பேட்டியின்போது, மாநிலச் செயலா் ஏ. எஸ். ஷாஜகான், மாவட்ட தலைவா் முஹம்மது சுல்தான், இளைஞரணி நிா்வாகி முகமது உசேன், மாவட்டச் செயலா் ராஜாஜி உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.