சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகராட்சி பகுதியில் 27 வார்டுகளில் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகள், மாங்குளத்தில் உள்ள நகராட்சி குப்பை கிடங்கிற்கு எடுத்துச் செல்லப்படும். ஆனால், தற்போது நகராட்சி ஊழியர்கள் குப்பைகளை வாகனத்தில் ஏற்றி கொண்டு செல்லும் போது, அவை சாலையில் சிதறியபடி கொண்டு செல்லப்படுகின்றன.
இச்சம்பவத்தைக் காரில் பயணம் செய்த ஒருவர் வீடியோ பதிவுசெய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இந்த காட்சிகள் தற்போது வைரலாகி, பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், நகராட்சி நிர்வாகத்தின் பொறுப்பில்லாத செயல்பாடு குறித்து கேள்விகளையும் எழுப்பியுள்ளது.
சாலையில் குப்பைகள் சிதறுவதால், சுகாதார சீர்கேடுகள் மற்றும் போக்குவரத்து பிரச்சினைகள் ஏற்படக்கூடும் என்பதால், நகராட்சி நிர்வாகம் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.