சேலம் மாவட்டம் , இளம்பிள்ளை பேரூராட்சி புதிய ஏரி பகுதியில் செயல்படும் டாஸ்மாக் கடை மற்றும் இடங்கணசாலை நகராட்சி பாப்பாபட்டி பகுதியில் இரண்டு கடைகள் , தப்பக்குட்டை சின்ன மாரியம்மன் கோவில் , பெருமாகவுண்டம்பட்டி மண் கரடு பிரிவு உள்ளிட்ட இடங்களில் செயல்பட்டு வரும் அரசு மதுபான கடைகளில் ரூ. 10 வாடிக்கையாளரிடம் கூடுதலாக பெற்று வருவதாகவும், மேலும் விற்பனையாளர்கள் சந்து கடைகளுக்கு அதிக அளவில் சரக்குகளை அனுப்பி வைத்து நல்ல வருமானம் பார்த்து வருவதாக குடிமகன்கள் புகார் தெரிவித்துள்ளனர். இது குறித்து குடிமகன்கள் கேள்வி கேட்டால் நாங்கள் தொழிற்சங்கத்தில் முக்கிய பதவி வகிக்கிறோம் என்றும், எங்களை யாரும் எதுவும் செய்ய முடியாது எனக் கூறி அடாவடியாக வசூல் செய்து வருகின்றனர். அது மட்டுமல்லாமல் நாங்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மாதந்தோறும் மாமூல் கொடுத்து வருகிறோம் என்றும், எங்களை யாரும் எதுவும் பண்ண முடியாது எனவும் தெரிவிப்பதாக புகார் தெரிவித்துள்ளனர். இது குறித்து அரசு உயர் அதிகாரிகள் மேற்கண்ட கடைகளில் நேரில் ஆய்வு செய்து கடை விற்பனையாளர் மற்றும் கண்காணிப்பாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.