சேலம் மாவட்டம் மல்லூர் அருகே உள்ள தாசநாயக்கன்பட்டி கிராமம் பத்மாவதி நகரை சேர்ந்தவர் சரவணகுமார் (வயது 50). இவர் தன்னுடைய வீட்டின் கீழ் தளத்தில் எண்ணெய் மில் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு சரவணகுமார் எண்ணெய் மில்லை மூடிவிட்டு தன்னுடைய வீட்டின் மேல் தளத்தில் குடும்பத்துடன் உறங்க சென்றுள்ளார். நேற்று காலை மீண்டும் எண்ணெய் மில்லை திறந்த போது மேஜை டிராயர் உடைக்கப்பட்டு அங்கு வைக்கப்பட்டிருந்த ரூ. 42 ஆயிரம் திருட்டு போயிருந்தது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த சரவணகுமார் மல்லூர் போலீசில் புகார் அளித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சரவணகுமார் வீட்டில் வைக்கப்பட்டிருந்த சி. சி. டி. வி. கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில் சேலம் சீலநாயக்கன்பட்டி ஊத்துமலை நகரை சேர்ந்த ஹரிஹரன் (வயது 20), தாசநாயக்கன்பட்டி லட்சுமி நகரை சேர்ந்த விஜய் (18), சேலம் எருமாபாளையம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் உள்பட 3 பேர் சேர்ந்து சரவணகுமார் வீட்டில் திருடியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர்.