சேலம் சென்ட்ரல் சட்டக்கல்லூரியில் மாநில அளவில் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கான தமிழர்களின் வரலாறும், கலாசாரமும் என்ற தலைப்பில் பேச்சரங்கம் நடந்தது. அதனை தொடர்ந்து அதற்கான பரிசளிப்பு விழா நேற்று (அக்.18) நடந்தது. கல்லூரி இணைப்பேராசிரியர் நடராஜன் வரவேற்றார்.
விழாவில், கல்லூரியின் தலைவர் சரவணன் தலைமை தாங்கி பேசும்போது, பள்ளி மாணவர்கள் தமிழர்களின் வாழ்வைப்பற்றியும், கலாசாரம் பற்றியும் அறிந்து கொள்ள இது போன்ற பேச்சரங்கத்தை மாதிரியாக எடுத்துக்கொண்டு பேச்சுத்திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும். அதுபோல், வக்கீல் தொழிலில் மிக முக்கியமானதாக கருதப்படுவது மொழித்திறமையும், பேச்சுகலையுமே ஆகும். எனவே, மாணவர்கள் இதுபோன்ற பேச்சு போட்டிகளில் கலந்து கொண்டு மொழி, பேச்சுத்திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.
மேலும், சென்னை ஐகோர்ட்டின் மூத்த வக்கீல் இளம்வழுதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தமிழர்களின் வாழ்வியல் பற்றியும், கலாசாரம் பற்றியும் பேசினார். இந்த பேச்சரங்கத்தில் மாநிலம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 100-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். பங்கு பெற்ற அனைவருக்கும் சான்றிதழும், பரிசு பெற்றவர்களுக்கு கோப்பையும் வழங்கப்பட்டது.