நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு இன்று தொடங்கியது. இதில் கலந்து கொண்ட மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசும்போது, முதலில் பி என் ஸ்ரீ திட்டத்தில் கையெழுத்திட வந்த தமிழ்நாடு கடைசி நேரத்தில் யூ- டர்ன் போட்டது. முதலில் சரி என்று கூறிவிட்டு இப்போது அதனை வைத்து அரசியல் செய்து தமிழக மாணவர்களின் வாழ்க்கையை நாசமக்கிறார்கள். என்னை பொறுத்தவரையில் திமுகவினர் நாகரிகமற்றவர்கள், ஜனநாயகம் இல்லாதவர்கள். தமிழ்நாட்டு மாணவர்களின் நலனில் அக்கறை இல்லாமல் இருக்கிறார்கள். மாணவர்களின் எதிர்காலத்தை சீரழிக்கிறார்கள். தமிழ்நாட்டு மக்களிடம் அவர்கள் நேர்மையாக இல்லை என திமுக குறித்து பேசினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவைச் சேர்ந்த எம்பிகள் கடும் அமலியில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் மத்திய அமைச்சர் தமிழ்நாடு எம்பிக்கள் நாகரிகமற்றவர்கள் என பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து சேலம் மத்திய மாவட்ட திமுக சார்பில் சேலம் கலெக்டர் ஆபீஸ் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாநகர திமுக செயலாளர் ரகுபதி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்க்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் உருவப்படத்தை கிழித்தெறிந்து, உருவ பொம்மையை எரித்து கண்டனத்தை தெரிவித்தனர்.