வங்க கடலில் உருவான பெஞ்ஜல் புயல் காரணமாக சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.
இந்நிலையில், சேலத்தில் பெஞ்ஜல் புயல் காரணமாக நேற்று முன்தினம் முதல் தொடர்ந்து இடைவிடாமல் மழை பெய்தது. சேலம் நகரில் பெரும்பாலான சாலைகளிலும், தாழ்வான பகுதிகளிலும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
குறிப்பாக கன்னங்குறிச்சி, அஸ்தம்பட்டி, சூரமங்கலம், அம்மாபேட்டை, கிச்சிப்பாளையம், செவ்வாய்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் இடைவிடாமல் மழை கொட்டி தீர்த்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.
சேலத்தில் நேற்று 3-வது நாளாக மழை நீடித்தது. ஏற்காடு மலைப்பாதையில் ெதாடா் மழையால், அடிவாரம், கருங்காலி கிராமம், ஏ. டி. சி. நகர் ஓடை வழியாக சாரதா கல்லூரி சாலை, டி. வி. எஸ். ஓடை, சாமிநாதபுரம் ஓடை வழியாக பள்ளப்பட்டி ஏரிக்கு மழைநீர் வரத்து அதிகரித்தது. இந்த ஓடையில் நேற்று முன்தினம் இரவு திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதையடுத்து சாமிநாதபுரம் சின்னேரி வயல்காடு பகுதியில் தாழ்வாக உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் இரவு முழுவதும் பொதுமக்கள் தூங்க முடியாமல் அவதிப்பட்டனர். இதையடுத்து நேற்று காலை வீடுகளுக்குள் புகுந்த மழைநீரை பாத்திரங்களால் வெளியேற்றும் பணியில் பொதுமக்கள் ஈடுபட்டனர். வீடுகளுக்குள் இருந்த பொருட்களும் தண்ணீரில் நனைந்து சேதமானது.