சேலம் அஸ்தம்பட்டி தாசில்தார் அலுவலகம் அருகே ஒருங்கிணைந்த நெடுஞ்சாலைத்துறை நபார்டு மற்றும் கிராம சாலைகள் கண்காணிப்பு பொறியாளர் மற்றும் கோட்ட பொறியாளர் அலுவலகங்கள் உள்ளன.
இந்த அலுவலகத்தில் ஒப்பந்ததாரர்கள் மற்றும் தொழிலாளர்கள் இன்று வாயில் கருப்பு துணி கட்டி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். அப்போது ஒப்பந்ததாரர்கள் கூறியதாவது, நாங்கள் கடந்த 20 ஆண்டுகளாக ஒப்பந்த பணி செய்து வருகிறோம். தற்போது தலைவாசல் அருகே உள்ள வரவூர், சிறுவாச்சூர் பகுதியில் 7 கிலோமீட்டர் தூரம் சாலை அமைப்பதற்கு ஏழு கோடி செலவில் டெண்டர் அறிவிக்கப்பட்டது. இதற்கான டெண்டர் தேதி நேற்று முடிவடைந்தது.
ஆனால் அதற்காக நாங்கள் விண்ணப்பித்த நிலையில் தர சான்று கேட்டு நாங்கள் அதிகாரிகளிடம் விண்ணப்பித்தோம். ஆனால் அதிகாரிகள் இதுவரை தரச் சான்று தர மறுக்கிறார்கள். குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் தர சான்று வழங்குகிறார்கள். தர சான்று கொடுக்காவிட்டால் ஒப்பந்தம் வழங்கப்பட மாட்டாது. இதனால் தரச் சான்று தராதை கண்டித்து இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். பாரபட்சமாக செயல்படும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார். தொடர்ந்து அஸ்தம்பட்டி போலீசார் அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.