ஓமலூரை அடுத்த கருத்தானூர் பகுதியைச் சேர்ந்தவர் சுமதி (வயது 38). கூலி வேலை செய்து வருகிறார். இவர், நேற்று (டிசம்பர் 7) தன்னுடைய தங்கையுடன் ஓமலூர் போலீஸ் நிலையம் வந்தார். திடீரென கையில் வைத்திருந்த மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அங்கிருந்த போலீசார் இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே சுமதியை தடுத்து நிறுத்தி அவர் மீது தண்ணீரை ஊற்றினர். அவர், ஏன் தற்கொலைக்கு முயன்றார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், சுமதியின் பக்கத்து வீட்டை சேர்ந்தவர், சுமதிக்கு சொந்தமான வீட்டை சேதப்படுத்தியதுடன், நகை பணத்தை அபகரித்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம். இதனால் வேதனை அடைந்த சுமதி, தனது தங்கையுடன் வந்து போலீஸ் நிலையத்தில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது தெரிய வந்தது. இந்த சம்பவம் தொடர்பாக ஓமலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.