ஓமலூரில் நடைபெற்ற இலவச சட்ட பயிற்சி வகுப்பில் பள்ளி பாடத்திட்டத்தில் சட்டப்பிரிவை சேர்க்க வலியுறுத்தல்
சேலம் மாவட்டம் ஓமலூர் பேருந்து
நிலையம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சட்ட விழிப்புணர்வு உலகம் நடத்திய சாமானியனுக்கான சட்டப் பயிற்சி வகுப்பு பொதுமக்களுக்கு இலவசமாக நடத்தப்பட்டது.
சமூக ஆர்வலர் முனைவர். இரா. பெரியசாமி தலைமையில் நடைபெற்ற இந்த சட்ட பயிற்சி வகுப்பில், மனித உரிமைகள், பத்திர பதிவுத்துறை, பொய் வழக்கினை சட்டத்தின் அடிப்படையில் எதிர்கொள்வது எப்படி? தன் வழக்கில் தானே வழக்காடுவது எப்படி? உள்ளிட்ட பல்வேறு விதமான பொதுமக்களின் சந்தேகங்களுக்கு சம்பந்தப்பட்ட துறைகளைச் சேர்ந்தவர்கள் விளக்கம் அளித்தனர்.
மேலும், சேலம் சட்ட விழிப்புணர்வு உலக மாவட்ட செயலாளர் ஜெயசிம்மன், கிளைச் செயலாளர் இருசப்பன் மற்றும் லா பவுண்டேஷன் இந்தியா தேசிய பொதுச்செயலாளர் ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு அடிப்படை நடைமுறை சட்ட உரிமைகள் பற்றி பொது மக்களுக்கு விரிவாக எடுத்துக் கூறியதோடு, பள்ளிக்கல்வித்துறை ஐந்தாம் வகுப்பு முதலே பாடத்திட்டத்தில் சட்ட பிரிவை சேர்க்க வேண்டும் என தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்து தீர்மானம் நிறைவேற்றினர்.
இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் பெற்றதோடு அடிப்படை சட்ட உரிமைகள் சம்பந்தமான புத்தகங்களை வாங்கிச் சென்றனர்.