சேலம் மாவட்டம் கொளத்தூர் அருகே தின்னப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட வெள்ளை கரட்டூர் கிராமத்தில் கடந்த சில வாரங்களாக சிறுத்தை ஆடு, கோழி, வளர்ப்பு நாய்களை கடித்து குதறி அட்டகாசம் செய்து வருகிறது. இதுவரை சுமார் 10-க்கும் மேற்பட்ட ஆடுகள், கோழிகள், வளர்ப்பு நாய்கள் ஆகியவற்றை சிறுத்தை கடித்து கொன்று உள்ளது.
வனத்துறையினர் 5 இடங்களில் கூண்டுகள் வைத்தும் சிறுத்தை சிக்கவில்லை. இதனால் இந்த கிராம மக்கள் வெளியே செல்லாமல் வீடுகளில் முடங்கி உள்ளார்கள். தங்கள் கால்நடைகளை சிறுத்தை தொடர்ந்து கடித்து வருவதால் விவசாயிகள் சாலை மறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இதையடுத்து வனத்துறையினர் சிறுத்தையை பிடிக்க தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் சேலம் கலெக்டர் பிருந்தா தேவி கரட்டூர், புதுவேலமங்கலம் உள்ளிட்ட கிராம பகுதிக்கு நேற்று(செப்.25) நள்ளிரவு நேரில் சென்று வனத்துறை மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தார்.