சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே தளவாய்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கோபால். இவருடைய மகன் கார்த்திக் (வயது 33). இவர், தீவட்டிப்பட்டி மேம்பாலம் அருகில் நகைக்கடை, நகை அடகு கடை நடத்தி வருகிறார். இந்த கடையில் தீவட்டிப்பட்டி பகுதியைச் சேர்ந்த அனுமந்தன் மகன் கார்த்திக் (28) என்பவர் மேலாளராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்த பின்னர் வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு கார்த்திக், மேலாளர் கார்த்திக் ஆகியோர் வீடுகளுக்குச் சென்று விட்டனர்.
நேற்று (டிசம்பர் 9) காலை அவர்கள் வழக்கம் போல கடையைத் திறந்தனர். அப்போது கடையின் மேஜை திறந்து கிடந்தது. அதில் இருந்த 30 கிராம் தங்க நகைகள், 6½ கிலோ வெள்ளிப்பொருட்கள், ரூ. 25 ஆயிரம் ஆகியவை கொள்ளை போய் இருந்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் கடையின் உள்பகுதியில் சுற்றிப் பார்த்த போது கடையின் பின்பக்க சுவரில் ஒரு ஆள் சென்று வரும் அளவுக்கு பெரிய துளை போடப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து கடை உரிமையாளர் கார்த்திக், தீவட்டிப்பட்டி போலீசுக்குத் தகவல் தெரிவித்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானசேகர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். மோப்பநாய், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. தொடர்ந்து போலீசார் விசாரணை செய்கின்றனர்.