தேர்தலை முன்னிட்டு தமிழக-கர்நாடக மாநில போலீஸ் ஆலோசனை

57பார்த்தது
தேர்தலை முன்னிட்டு தமிழக-கர்நாடக மாநில போலீஸ் ஆலோசனை
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழக-கர்நாடக மாநில போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் மேட்டூரில் நடந்தது. தேர்தல் ஆணையம் முன்னேற்பாடு பணிகளை தொடங்கி விட்டது. இதன் ஒருபகுதியாக ஒவ்வொரு மாநிலங்களிலும் எல்லையோர மாவட்டங்களில் உள்ள போலீசார் அண்டை மாநில போலீசாருடன் இணைந்து செயல்பட தற்போதே ஆலோசனை கூட்டங்களை நடத்த அறிவுறுத்தி உள்ளது.
அந்த வகையில், சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் கபிலன் தலைமையில் அண்டை மாநிலமான கர்நாடக மாநில காவல்துறையினருடன் கலந்துரையாடல் கூட்டம் நேற்று நடைபெற்றது.
இதில் தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசுபாதம், ஈரோடு மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாலமுருகன், மேட்டூர் போலீஸ் துணை சூப்பிரண்டு மரியமுத்து, கர்நாடக மாநிலம் மாதேஸ்வரன் மலை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகதீஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு நடந்த இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விஷயங்கள் குறித்து, சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் கபிலன் நிருபர்களிடம் கூறியதாவது: -
தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் அண்டை மாநிலங்களை ஒட்டி அமைந்துள்ள மாவட்டத்தை சேர்ந்த போலீசார், அண்டை மாநில காவல்துறையினருடன் இணைந்து செயல்பட வேண்டும், இந்த கூட்டத்தின் மூலம் மது கடத்தல் மற்றும் ஆயுத கடத்தலை தடுக்கவும், ரவுடிகள் செயல்பாட்டை தடுக்கவும் கலந்தாலோசிக்கப்பட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி