கமுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட மருத்துவரணி சார்பில் குழந்தைகளுக்கு இலவசமாக ஊட்டச்சத்து உணவு பொருட்கள் வழங்கப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட மருத்துவர் அணி தலைவரும், அன்னை பல் மருத்துவமனையின் நிறுவனருமான மருத்துவர் கே. கார்த்திகேயன் ஏற்பாட்டில் முதுகுளத்தூர் சட்டப்பேரவை தொகுதிக்கு உள்பட்ட பல்வேறு கிராமப்புற பகுதிகளில் நடத்தப்பட்ட இலவச மருத்துவ முகாம், அன்னதான நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கமுதி பேரூராட்சி பகுதிக்கு உள்பட்ட பெரிய பள்ளிவாசல் தெருவில் வசித்து வரும் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் குழந்தைகளை கண்டறிந்து முதல்கட்டமாக 50 குழந்தைகளுக்கு இலவசமாக முட்டை, பால், ரொட்டி மற்றும் வாழைப்பழம் ஆகிய ஊட்டச்சத்து நிறைந்த உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சி மாவட்ட தலைவர் மலர்விழி ஜெயபாலா தலைமையில் நடைபெற்றது. கழகத்தின் நிர்வாகிகள் மருத்துவர் பத்மா கார்த்திகேயன், ஜோதி, தீனுல் ஹக், வேலு, காளிமுத்து மற்றும் ஒன்றிய, கிளைக் கழக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் அன்னை பல் மருத்துவமனை அறக்கட்டளை சார்பில் செய்யப்பட்டது.