ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள சேகநாதபுரம் கிராமத்தில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி நூற்றாண்டு விழாவை கண்டுள்ளது.
இந்தப் பள்ளிக்கு பெருமைப்படுத்தும் விதமாக இந்து - முஸ்லிம்கள் அனைவரும் சமத்துவமாக மேளதாளம் முழங்க பள்ளிக்குத் தேவையான சேர் , டேபிள், பீரோ, குடம், பாத்திரங்கள், உள்ளிட்ட ஒரு லட்சம் மதிப்பிலான சீர்வரிசை பொருள்களை கிராமங்களில் உள்ள தெருக்கள் வழியாக மேளதாளம் முழங்க பட்டாசு வெடித்து ஊர்வலமாக எடுத்து வந்தனர்.
கிராம பொது மக்களுக்கு ஆசிரியர்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
சிபிஎஸ்இ, மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர்களுக்கு நிகராக சேகநாதபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவ மாணவிகள் ஆங்கிலத்தில் உரையாடியது பார்ப்போரை வியக்கவைத்தது.
பின்னர் மாணவ மாணவிகளின் கரகாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இப்பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சியில் பள்ளியில் பணியாற்றிய முன்னாள் தலைமை ஆசிரியர், ஆசிரியர்களுக்கும். முன்னாள் பள்ளி மாணவர்களுக்கும் சால்வை அணிவித்தும் கேடயம் வழங்கியும் பாராட்டி கௌரவிக்கப்பட்டது.
தமிழக அரசின் சார்பில் அரசு பள்ளியில் செயல்படுத்தப்படும் நலத்திட்டங்கள் குறித்து மாணவர்கள் பெற்றோர்கள் மத்தியில் எடுத்துரைத்தனர்.