விராலிமலை, இலுப்பூர் புனித பதுவை அந்தோணியார் ஆலய விழா கொடியேற்றத்துடன் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
இலுப்பூர் புனித பதுவை அந்தோணியார் ஆலயம் அப்பகுதியில் சிறப்பு பெற்ற கிறிஸ்தவ தேவாலயம் ஆகும். இங்கு ஆண்டுதோறும் ஜூன் மாதத்தில் 10 நாள்கள் பெருவிழா நடைபெறும்.
இதன்படி, நிகழாண்டுக்கான பெருவிழா கொடியேற்றம் பதுவை அந்தோணியார் ஆலயத்தில் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சிறப்பு திருப்பலி நடத்தப்பட்டு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தொடர்ந்து விழாவில் பங்கேற்றவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
வரும் நாள்களில் தினமும் சிறப்பு திருப்பலியும், மறையுரையும் நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்வான வாணவேடிக்கையுடனான பெரிய திருத்தேர் பவனி ஜூன் 12-ஆம் தேதி (9ஆம் நாள்) நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து விழாவின் பத்தாம் நாளில் சிறப்பு திருப்பலியும் திவ்ய நற்கருணை ஆசீர் நடைபெறும். தொடர்ந்து கொடி இறக்கப்பட்டு விழா நிறைவடைகிறது. விழா ஏற்பாடுகளை இலுப்பூர் பங்குத்தந்தை அருட்பணி ஆரோக்கியராஜ், அருட்சகோதரிகள், பங்கு இறைமக்கள் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.