விராலிமலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தார்.
விராலிமலையை அடுத்துள்ள சேதுராப்பட்டியை சேர்ந்த அழகர் மகன் நீலமேகம் (26). இவருக்கு திருமணம் ஆகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இவர் விராலிமலையில் இயங்கி வரும் வால்வு தயாரிக்கும் தனியார் தொழிற்சாலையில் ஒப்பந்த தொழிலாளியாக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் பணிக்கு செல்வதற்கு தனது இருசக்கர வாகனத்தில் தொழிற்சாலை நோக்கி சென்று கொண்டிருந்தார். விராலிமலை- திருச்சி தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடி அருகே இருசக்கர வாகனம் சென்றபோது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் நீலமேகம் மீது மோதி விட்ட நிற்காமல் சென்று விட்டது. இந்த விபத்தில் தலையில் பலத்த காயமடைந்த நீலமேகம் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். விராலிமலை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.