புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அரசமரம் பஸ் ஸ்டாப்பில் சிவகங்கை லோக்சபா தொகுதியில் ஐ. என். டி. ஐ. ஏ கூட்டணி காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் கார்த்தி சிதம்பரத்திற்கு ஆதரவாக தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன், பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது அவர் பேசுகையில்.
ஆலங்குடி பேரூராட்சியில் ரூ. 25 கோடி மதிப்பிலான திட்டங்கள் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆலங்குடி சிவன் கோயில் குளம், செட்டிகுளம், கல்லுக்குண்டு கரை குளம் சீரமைக்கப்பட்டு நடை பாதை அமைக்கப்பட்டுள்ளது. தார், பேவர் பிளாக், சிமெண்ட் சாலைகள், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள், ரூ. 75 கோடி மதிப்பீட்டில் புறவழிச்சாலை, ரூ. 10 கோடி மதிப்பீட்டில் பெரியகுளத்தை சீரமைத்து 7 கி. மீ தூரத்திற்கு பூங்காவுடன் பேவர் பிளாக் நடை பாதை அமைக்கப்பட உள்ளது. பாதாள சாக்கடை திட்ட பணிகள் 2 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட உள்ளது. அறிவுசார் மையம் ரூ. 2 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ளது. இது போன்ற இன்னும் பல திட்டங்களை நிறைவேற்ற இந்தியா கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இதில், கார்த்தி சிதம்பரம் மனைவி ஶ்ரீநிதி, காங்கிரஸ் மாவட்ட தலைவர் ராம. சுப்புராம் உட்பட ஐ. என். டி. ஐ. ஏ கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.