புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் கறம்
பக்குடி தாலுகா நம்பம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் இளங்கோவன்(48). திமுக வடக்கு மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுனர் அணி துணை அமைப்பாளராக பதவி வகித்து வருகிறார். இந்நிலையில் காதல் விவகாரம் தொடர்பான விசாரணைக்காக வந்தவர்களுடன் ஆலங் குடி அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனுக்கு இளங்கோவன் நேற்று சென்றார். அப்போது அங்கு பணியில் இருந்த பெண் போலீசாரை தரக்குறைவாக பேசியுள்ளார். பெண் போலீஸ் ஒருவர் கண்டித்தபோது, இன்னும் 24 மணி நேரத்துக்குள் வேலையை விட்டு தூக்கிவிடுவேன் என்று மிரட்டினார். மேலும் கொலை மிரட்டலும் விடுத்தார். இதுதொடர்பாக பெண் போலீசார் அளித்த புகாரின்பேரில் ஆலங்குடி போலீசார் வழக்குப்பதிந்து இளங்கோவனை கைது செய்தனர். தமிழகத்தில் ஆங்காங்கே அரசு அதிகாரிகள், போலீசார் மற்றும் வியாபாரிகளை திமுகவினர் மிரட்டி, தாக்கும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது. அந்த வரிசையில் போலீஸ் ஸ்டேஷனிலேயே நுழைந்து பெண் போலீசை திமுக பிரமுகர் மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.