காரைக்கால் மாவட்டம் கோட்டுச்சேரி அடுத்த ராயன்பாளையம் பகுதியில் உள்ள ஒரு காலி மனை தொடர்பாக கோட்டுச்சேரி ஏ. ஜெ நகரை சேர்ந்த காளியப்பன் என்பவருக்கும், நாகையை சேர்ந்த செந்தில்குமார் என்பவருக்கும் நில உரிமை தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் சர்ச்சைக்குரிய அந்த இடத்தின் பெயரில் கடன் வழங்க வேண்டி நாகை சேர்ந்த செந்தில்குமார் நாகூரில் உள்ள சிட்டி யூனியன் வங்கியில் விண்ணப்பம் செய்துள்ளார். நீதிமன்ற வழக்கு பற்றி தெரியாத வங்கி மேலாயர்
விஜய் சக்ரவர்த்தி மற்றும் இரு ஊழியர்களும் இன்று அந்த இடத்தை நேரில் பார்வையிட்டு மதிப்பீடு செய்ய சென்றுள்ளனர். அப்போது அங்கிருந்த காளியப்பனின் உறவினர் பிரகாஷ் வங்கி மேலாளர் உள்ளிட்ட மூவரையும் தரக்குறைவாக திட்டி கட்டையால் தாக்கியதில் மூவரும் காயமுற்றனர். காயமடைந்த வங்கி மேலாளர்
விஜய் சக்ரவர்த்தி மற்றும் ஊழியர்கள் சதீஷ், அரவிந்த் ஆகிய மூவரையும் அவரது நண்பர்கள் மீட்டு காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக அனுமதித்தனர்.
மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட மூவரையும் கோட்டுச்சேரி போலீசார் நேரில் சென்று அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு புகாரை பெற்று வழக்கு பதிவு செய்தனர். மேலும் வங்கி ஊழியர்களை தரக்குறைவாக பேசி தாக்குதல் நடத்தி தலைமறைவாக உள்ள பிரகாஷை கோட்டுச்சேரி போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.