கீழநத்தம் ஊராட்சி ஜனாதிபதி விருதுக்கு தேர்வு!
மத்திய அரசு ஆண்டுதோறும் சிறந்த ஊராட்சிகளுக்கு வழங்கும் தீன்தயாள் உபாத்யாயா பஞ்சாயத்து விகாஸ் புரஸ்கார் விருதுக்கு இந்த ஆண்டு கோவை மாவட்டம், சர்க்கார் சாமக்குளம் ஒன்றியத்தைச் சேர்ந்த கீரணத்தம் ஊராட்சி தேர்வு செய்யப்பட்டுள்ளது. உள்கட்டமைப்பில் தன்னிறைவு பெற்ற ஊராட்சி பிரிவில் தேசிய அளவில் முதல் இடம் பெற்றுள்ள கீரணத்தம் ஊராட்சிக்கு ரூ. 1 கோடி பரிசுத் தொகை வழங்கப்படும். இந்த விருதை வரும் டிசம்பர் 11 ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் விழாவில் ஜனாதிபதி திரௌபதி முர்மு வழங்க உள்ளார். இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க, எஸ். எஸ். குளம் வட்டார வளர்ச்சி அலுவலர் தனலட்சுமி, கீரணத்தம் ஊராட்சி தலைவர் பழனிச்சாமி மற்றும் ஊராட்சி செயலர் பாலாஜி ஆகியோர் டெல்லி சென்றுள்ளனர். இந்த விருது வழங்கும் திட்டத்தின் கீழ், ஒன்பது பிரிவுகளில் தலா மூன்று ஊராட்சிகள் தேர்வு செய்யப்படுகின்றன. முதலிடம் பெறும் ஊராட்சிக்கு ரூ. 1 கோடி, இரண்டாம் இடத்திற்கு ரூ. 75 லட்சம், மூன்றாம் இடத்திற்கு ரூ. 50 லட்சம் பரிசுத் தொகையாக வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டில் இருந்து மற்றொரு ஊராட்சியும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மகளிருக்கு அதிக பணிகள் செய்த பிரிவில் தென்காசி மாவட்டம் குருவிகுளம் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த வரகனூர் ஊராட்சி தேசிய அளவில் மூன்றாம் இடத்திற்கு தேர்வாகி ரூ. 50 லட்சம் பரிசுத் தொகை பெறவுள்ளது.