காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக கர்நாடக அணைகள் முழு கொள்ளளவை எட்டியதை அடுத்து, கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து ஒரு லட்சத்து 30 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு வினாடிக்கு ஒரு லட்சத்து 20 ஆயிரம் கன அடி நீர் தற்போது வந்து கொண்டு உள்ளதால் மேட்டூர் அணை தற்போது 100 அடி எட்டியதையடுத்து, இன்னும் சில தினங்களில் மேட்டூர் அணையின் முழு கொள் அளவான 120 அடியினை விரைவில் நிரம்பும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆகஸ்டு 3 ல் ஆடிப்பெருக்கு விழா நடைபெறுவதையொட்டி, ஞாயிற்றுக்கிழமை மேட்டூர் அணையிலிருந்து பொதுமக்களின் ஆடிப்பெருக்கு விழா கொண்டாடும் வகையில் காவிரி ஆற்றில் நீர் திறந்து விடப்பட உள்ளது. அதன் காரணமாக பள்ளிபாளையம் பகுதியில் காவேரி ஆற்றின் கரையோர பகுதிகளான ஜனதா நகர், மீனவர் தெரு, நாட்டான்கவுண்டன் புதூர் அக்ரஹாரம் உள்ளிட்ட பகுதிகளில் வருவாய் துறையினர் மற்றும் நகராட்சி நிர்வாகத்தினர் சார்பில் ஆட்டோ மூலம் ஒலிபெருக்கியில் பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும் வீடு வீடாக நகராட்சி ஊழியர்கள் மூலம் தாழ்வான பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மேடான பகுதிக்கு பாதுகாப்பாக செல்ல அறிவுறுத்தப்பட்டு வருகிறார்கள்.