தஞ்சை: கழிவுநீர் தேங்காமல் வெளியேற்ற நடவடிக்கை: மேயர் உறுதி
தஞ்சை பாலாஜி நகரில் கழிவுநீர் தேங்காமல் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மேயர் சண்முகராமநாதன் உறுதி கூறினார். தஞ்சை மாநகராட்சி பாலாஜி நகரில் வடிகாலில் அடைப்பு ஏற்பட்டதால் கழிவுநீர் செல்ல வழி இன்றி தேங்கி கிடந்தது. எனவே அடைப்பை தூர்வாரி கழிவுநீர் தடையின்றி செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து மாநகராட்சி மேயர் சண்முகராமநாதன், ஆணையர் கண்ணன் மற்றும் அதிகாரிகள், நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் பாலாஜி நகரில் ஆய்வு செய்தனர். அப்போது அடைப்பை சரிசெய்து கழிவுநீர் தேங்காதவாறு செய்ய வேண்டிய பணிகள் குறித்தும், நிரந்தரமாக இப்பிரச்னைக்கு தீர்வு காண்பதற்கான வழிமுறைகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. கழிவுநீர் தேங்காவண்ணம் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மேயர் உறுதி அளித்தார். மாநகர நல அலுவலர் நமச்சிவாயம், உதவி பொறியாளர் ரமேஷ் மற்றும் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.