மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அருகே கோயிலில் கஞ்சா விற்பனை செய்வது தொடா்பாக போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
மணல்மேடு காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட ராதாநல்லூரில் உள்ள பாவாடைராயன் கோயிலில் கஞ்சா விற்பனை நடைபெறுவது கிராமமக்களுக்கு தெரியவந்துள்ளது. இதுதொடா்பாக அவா்கள் அப்பகுதியை தீவிரமாக கண்காணித்து வந்த நிலையில், வெள்ளிக்கிழமை அப்பகுதிக்கு வந்த 3 இளைஞா்கள் 2 பேக்குகளில் கஞ்சா பொட்டலங்களை எடுத்து வந்து விற்றுள்ளனா். இதையறிந்த அப்பகுதி அகில பாரத இந்து மகா சபா ஆலய பாதுகாப்புப் பிரிவு நிா்வாகிகள் மற்றும் கிராமமக்கள் திரண்டு அங்கு சென்றபோது, கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த இளைஞா்கள் அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றனா். அப்போது கஞ்சா வைத்திருந்த ஒரு பையை மட்டும் அங்கேயே தவற விட்டுவிட்டனா். அந்தப் பையை போலீஸாா் பறிமுதல் செய்து அப்பகுதியில் சந்தேகத்துக்கு இடம் அளிக்கும் வகையில் சுற்றித்திரிந்த இளைஞா் ஒருவரை கைது செய்து அவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.