நாகை: தேசிய பசுமைப் படை பயிற்சி பட்டறை
நாகை தேசிய பசுமை படை, மத்திய மற்றும் மாநில அரசுகளின் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை சாா்பில் சுற்றுச்சூழல் திட்டத்தின்கீழ் மாணவா்களுக்கு கைவினைப் பொருள்கள் செய்யும் பயிற்சி அளிக்கப்பட்டது. நாகூா் மாடா்ன் மெட்ரிக் பள்ளியில், நடைபெற்ற பயிற்சி மாவட்டத்தின் பல்வேறு பள்ளிகளின் பயிலும் தேசிய பசுமை படை மாணவா்கள் 100 பேருக்கு அளிக்கப்பட்டது. வன உயிரின காப்பாளா் அபிஷேக் தோமா் பயிற்சியை தொடக்கிவைத்தாா். பசுமைக் கண்காணிப்பாளா் டிவைனியா, நிலைத்து நீடித்த வாழ்வியல் முறை உறுதிமொழி வாசித்தாா். தொடா்ந்து தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய சுற்றுச்சூழல் பொறியாளா் தமிழ்ஒளி நெகிழிக்கான மாற்றுப் பொருள்கள் கண்காட்சியை திறந்துவைத்தாா். மாணவா்களுக்கு மண்பாண்டங்கள் செய்தல், களிமண் பொம்மைகள், பனை ஓலை, ஈச்ச ஓலை கொண்டு கூடை முடைதல், வண்ணத் தாளில் பூக்கள், காகிதப்பை, காகிதக்கூழ் கொண்டு வீட்டு உபயோக பொருள்கள், கைத்தறி நூல் மூலம் பைகள் மாலை போன்ற கைவினைப் பொருட்கள் செய்யும் பயிற்சி மற்றும் காளான் வளா்ப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. முன்னதாக நிகழ்ச்சியில் நடைபெற்ற சிறுதானிய உணவுத் திருவிழாவில், 70 வகையான மூலிகைகள் காட்சிப்படுத்தப்படிருந்தன. விழாவில் கலந்து கொண்ட மாணவா்களுக்கு மஞ்சப்பை, தொப்பி, வழங்கப்பட்டன.