நாகை மாவட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் சம்பா அறுவடைக்கு பின்னர் விவசாயிகள் ஊடுபயிராக உளுந்து மற்றும் பச்சைப் பயிர் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். வழக்கத்திற்கு மாறாக இந்தாண்டு பருவம் தவறி கோடையில் கொட்டித் தீர்த்த கனமழை காரணமாக இவை பெரும் மகசூல் இழப்பை சந்தித்துள்ளது. பூக்கும் தருணத்தில் பெய்த மழை மற்றும் அதிக பனிப்பொழிவு காரணமாக பல்வேறு இடங்களில் பூக்கள் பூக்காமலும் செடியில் பூத்திருந்த பூக்கள் கொட்டியும் காய்கள் காய்க்காத சூழல் உள்ளது. குறிப்பாக திருக்குவளை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான ஆதமங்கலம், மாவிலங்கை, கீழகண்ணாப்பூர், ராமச்சந்திரபுரம், கீரங்குடி, வடபாதி, கோவில்பத்து, கொடியாலத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பயிரிடப்பட்ட சுமார் 1000 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவிலான உளுந்து மற்றும் பச்சைப் பயிர் சாகுபடியில் வெள்ளை ஈக்கள் தாக்கியதில் மஞ்சள் தேமல் நோய் உருவாகி உள்ளது. பச்சை பசேல் என்று காட்சி அளித்த வயல்வெளிகள் அனைத்தும் தற்பொழுது மஞ்சள் மஞ்சளேன்று என்று காட்சியளிப்பதோடு பயிர்களின் வளர்ச்சியும் வெகுவாக பாதித்துள்ளது. ஏக்கர் ஒன்றுக்கு ரூ 7000 முதல் 10 ஆயிரம் வரை செலவு செய்துள்ள சூழலில், தற்பொழுது மஞ்சள் நோய் தாக்குதல் காரணமாக விவசாயிகள் செய்வது அறியாத திகைத்து வருகின்றனர்.