நாகை அருகே கீழநாட்டிருப்பு சியாமளா தேவி மாரியம்மன் மற்றும் வீரமாகாளியம்மன் கோயில் பங்குனி பெருவிழா; காப்புக்கட்டி விரதமிருந்த 100 க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன்
நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை அடுத்த கீழநாட்டிருப்பு சியாமளா தேவி மாரியம்மன் மற்றும் வீரமாகாளியம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் பங்குனி திருவிழா கடந்த மார்ச் 23ம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீமிதி திருவிழா இன்றிரவு நடைபெற்றது. இதனை முன்னிட்டு சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருளிய அம்மன் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
தொடர்ந்து மேள தாளங்கள் முழங்க காப்பு கட்டி விரதம் இருந்த நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் குளக்கரையில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டனர். பின்னர் ஆலயத்தின் முன் அமைக்கப்பட்டிருந்த தீ குண்டத்தில் விரதம் இருந்த பக்தர்கள் பலர் தங்களது குழந்தைகளை கையில் சுமந்த படியும் பக்தி பரவசத்துடன் தீக்குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். முன்னதாக சிறப்பு அபிஷேக அலங்காரத்திற்கு பின்னர் அம்மனுக்கு மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது. இதில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அம்மனை தரிசனம் செய்தனர்.