நாகை: மாணவர்களுக்கு வெற்றி திலகமிட்டு வழி அனுப்பிய ஆசிரியர்கள்

79பார்த்தது
நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகேயுள்ள கிள்ளுக்குடியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியிலிருந்து பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு வெற்றி திலகமிட்டு உற்சாகமாக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சேர்ந்து வழியனுப்பி வைத்தனர். இப்பள்ளியில் பயிலும் 24 மாணவிகள் உட்பட 49 பேர் இன்று பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் மொழிப்பாடமான தமிழ் தேர்வு எழுத உள்ளனர். 

இவர்களுக்கான தேர்வு மையம் தேவூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள நிலையில் கிள்ளுக்குடி பள்ளியிலிருந்து மாணவர்கள் வேன் மூலம் பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டனர். 9.30 மணிக்கு துவங்கும் தேர்விற்கு அரை மணி நேரம் முன்பாகவே பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு நெற்றியில் வெற்றி திலகம் இட்டு இறைவனைப் பிரார்த்தனை செய்து அனுப்பி வைத்தனர். மாணவர்கள் பலரும் ஆசிரியர்களின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கி தேர்வு எழுத உற்சாகமாக புறப்பட்டனர். 

மாணவர்கள் தேர்வில் அதிக மதிப்பெண் பெற பள்ளி சார்பில் அவர்களுக்கு பேனா உள்ளிட்ட உபகரண பொருட்களும் வழங்கப்பட்டு தேர்வை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்ற அறிவுரையும் வழங்கப்பட்டுள்ளது. அரசு பள்ளி மாணவர்களை ஆசிரியர்களும் மாணவர்களும் ஒன்று சேர்ந்து கைதட்டி ஆரவாரத்துடன் உற்சாகமாக தேர்வு எழுத வழி அனுப்பி வைத்த நிகழ்வு வரவேற்பு பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்தி