மதுரை மாநகராட்சியின் பல்வேறு வார்டு பகுதிகளில் ஆங்காங்கே குடிநீர் வீணாக சாலைகளில் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இந்நிலையில் அமைச்சர் மூர்த்தியின் சொந்த தொகுதியான கிழக்கு சட்டமன்ற தொகுதி மாநகராட்சி எல்கைக்கு உட்பட்ட மேலபனங்காடி பகுதியில் பொதுமக்களுக்கு ஒரு குடம் கூட குடிநீர் கடந்த 3 மாதங்களாக கிடைக்கவில்லை என கூறி மாநகராட்சியை கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் போராட்டம் நடைபெற்ற பகுதிக்கு அருகேயுள்ள 4ஆவது வார்டுக்கு உட்பட்ட ஆனந்த நகர் பகுதியில் ஆனையூர் பிரதான சாலையில் குடிநீர் குழாய்கள் இணைப்பு பகுதியில் ஏற்பட்ட பழுது காரணமாக கடந்த ஒரு வாரமாக லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாக வெளியேறி அருகிலுள்ள காலியிடத்தில் கண்மாய் போல தேங்குகிறது.
இதேபோன்று அந்தப் பகுதிகளில் உள்ள ராட்சத குடிநீர் குழாய்களிலும் வால்வுகளில் சிறு சிறு உடைப்புகள் ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் புகார் அளித்தும் மாநகராட்சி கண்டுகொள்ளாத நிலையில் தினசரி குடிநீர் வீணாக வெளியேறி வருகிறது.
சிறிய பராமரிப்பு பணிகளில் கூட மாநகராட்சி நிர்வாகம் அலட்சியம் காட்டுவதால் அமைச்சர் தொகுதியில் ஒருபுறம் பொதுமக்கள் ஒரு குடம் குடிநீருக்காக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடும் நிலையும், மற்றொரு புறம் லட்சக்கணக்கான லிட்டர் வீணாக சாலைகளில் பெருக்கெடுத்து ஓடுவதும் பொதுமக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.