மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தென்கரை அக்ரஹாரத்தை சேர்ந்த ஸ்ரீமதி ராதா வெங்கட்ராமன் என்பவர் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தினுடைய சிஷ்யையாகவும் தனியார் பள்ளியில் தமிழ் ஆசிரியையாகவும் பணியாற்றி வருகிறார்.
இவர் தமிழ் மீது தீவிர பற்று கொண்டதால் தொல்காப்பிய நூல்கள் பற்றிய ஆய்வுகளை குழுவாக சேர்ந்து மேற்கொண்டு வருகிறார். இவரது கவிதைகள் இலங்கை வானொலியில் ஆறுக்கும் மேற்பட்ட முறைகள் வாசிக்கப்பட்டுள்ளது.
இவர் சியாம் ஆர்ட் அகடாமி மூலம் தமிழ் ஆர்வலர்களுடன் சேர்ந்து உலக சாதனை படைப்பதற்கான முயற்சிகளில் தன்னை ஈடுபடுத்தி கொண்டுள்ளார். அந்த வகையில் தொல்காப்பியரின் உருவப்படம் பொறித்த பேனரில் தொல்காப்பியத்தின் 1602 நூற்பாக்களை 20 மணி நேரம் 40 நிமிடத்தில் எழுதி சாதனை படைத்துள்ளார்.
இவரின் இந்த முயற்சிக்கு தமிழ் ஆர்வலர்களும் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர். எதிர்காலத்தில் தனியாக கவிதை நூல் வெளியிடுவது தனது ஆசை என்று கூறியவர் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தமிழை வளர்க்க கற்றுக் கொடுக்க வேண்டும். அதற்கான முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.