நாட்டில் கொரோனா வைரஸ் 2-வது அலை பல்வேறு மாநிலங்களில் தீவிரமாகப் பரவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் 1. 52 லட்சம் பேர் புதிதாக நோய் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். தொற்று பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு மாநிலங்களில் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையே, மராட்டியம் உள்ளிட்ட பல மாநிலங்களில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலை இருப்பதாக கூறி வருகின்றன. அதே போல், கொரோனா தடுப்பூசி போடுவதற்கு விதிக்கப்பட்டுள்ள வயது வரம்பை தளர்த்த வேண்டும் என்றும் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: தடுப்பூசி போதுமான அளவில் இல்லாவிட்டால், கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முடியாது. வேலைவாய்ப்பு இல்லை, தொழிலாளர்கள், விவசாயிகளுக்கு நிவாரண உதவி இல்லை, குறு, சிறு, நடுத்தர தொழில்களுக்கு பாதுகாப்பில்லை, நடுத்தரக் குடும்பத்தினரும் மனநிறைவுடன் இல்லை. மாம்பழம் சாப்பிடுவது சரிதான், ஆனால், குறைந்த பங்களிப்பை சாமானிய மனிதருக்கு வழங்கிட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.