கரூர் மாவட்டம் குளித்தலை அருகே இனுங்கூர் ஊராட்சிக்கு உட்பட்ட மேல சுக்காம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் லாரி ஓட்டுநர் அருண். இவர் திருநெல்வேலியை சேர்ந்த லட்சுமியை காதல் திருமணம் செய்து 5 ஆண்டுகள் ஆகி இரண்டு மகன்கள் உள்ளனர்.
நேரம் சரியில்லாத காரணத்தால் அதே கிராமத்தில் தோட்டத்துடன் உள்ள வீட்டில் அருண் தனது மனைவி மகன்களுடன் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளனர். அருண் லாரி ஓட்டுநர் வேலைக்கு செல்வதும் வேலையில்லாத நாட்களில் உள்ளூரில் எலக்ட்ரீசியன் வேலைக்கு செல்வதும் வழக்கம்.
இந்த நிலையில் இன்று காலை லட்சுமி தனது கிராமத்தில் உள்ள விவசாய கிணற்றில் 2 மகன்களுடன் குதித்து தற்கொலை முயற்சி செய்துள்ளார்.
இதில் 6 வயதான தர்ஷன் கிணற்றில் இருந்த கயிறினை பிடித்து மூன்று மணி நேரமாக கூச்சல் இட்டுக் கொண்டிருந்துள்ளார். அவ்வழியே சென்ற நபர் கூச்சல் இடுவதைக் கேட்டு கிணற்றில் எட்டிப் பார்த்து அந்த சிறுவனை மீட்டுள்ளார். மேலும் குளித்தலை போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவலறிந்து அங்கு வந்த தீயணைப்பு துறையினர் லட்சுமி (26). மற்றும் இளைய மகன் நிஷாந்த் (4) ஆகிய இருவரையும் சடலமாக மீட்டனர். குளித்தலை போலீசார் இருவரது உடலையும் குளித்தலை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தர்ஷன் இனுங்கூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
குளித்தலை போலீசார் விசாரணை.