கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் பாதிப்பால் உயிரிழப்பு ஏற்பட்டதையடுத்து, அண்டை மாநிலங்களும் உஷார்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி கன்னியாகுமரி, சுகாதாரத்துறையினர் கண்காணிப்பை தொடங்கி உள்ளனர்.
களியக்காவிளை சோதனை சாவடியில் சுகாதாரத்துறையினர் இன்று (18-ம் தேதி) முதல் காய்ச்சல் பரிசோதனை செய்தனர். குமரி மாவட்டத்தை பொறுத்தவரை களியக்காவிளை, காக்கவிளை சோதனை சாவடிகளில் இன்று காய்ச்சல் பரிசோதனையில் சுகாதாரத்துறையினர் ஈடுபட்டனர். இதற்காக சிறப்பு கண்காணிப்பு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இந்தக் குழுவினர் கேரளாவில் இருந்து வரும் வாகனங்களை தடுத்து நிறுத்தி சோதனை செய்து வருகின்றனர். 24 மணி நேரமும் கண்காணிப்பு பணி செய்வதற்காக 3 சுற்றுகளாக பணி பிரிக்கப்பட்டுள்ளது. ஒரு சுற்றுக்கு 2 பேர் பணியில் உள்ளனர். அவர்கள் கேரளாவில் இருந்து வருபவர்களை, தெர்மாமீட்டர் உதவியுடன் பரிசோதித்தனர். இதற்கிடையில் குமரி அரசு மெடிக்கல் காலேஜ் ஆஸ்பத்திரியில் நிபா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க தனி வார்டுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.