சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரி கடலில் விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இவற்றை பார்வையிட தினமும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானவர்கள் வந்து செல்வது வழக்கம். இந்த சிலைகளை பார்வையிடுவதற்காக தமிழக அரசு சார்பில் மூன்று சுற்றுலா படகுகள் இயக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையில் சுனாமிக்கு பிறகு கடலில் ஏற்படும் பல்வேறு வகையான மாற்றங்களால் பௌர்ணமி, அமாவாசை போன்ற நாட்களில் தொடர்ந்து தற்போது கடலில் நீர்மட்டம் தாழ்வது நடந்து வருகிறது. இந்த நாட்களில் சுற்றுலா படகுகள் தரைதட்டி இயக்க முடியாத நிலை ஏற்படும்.
இந்த வகையில் தற்போது கன்னியாகுமரி கடலில் கடந்த நான்கு நாட்களாக காலை முதல் மதியம் வரை கடலில் நீர்மட்டம் தாழ்வு காரணமாக படகுகள் இயக்க முடியாத சூழல் ஏற்பட்டது. இன்று (21ஆம் தேதி) 5-ம் நாளாக காலையிலே மீண்டும் கடல் நீர் தாழ்வு ஏற்பட்டது. இதனால் படகுகள் இயக்க முடியாமல் சுற்றுலாப் பயணிகள் படகு தளத்தில் வரிசையாக காத்திருந்தனர்.
இது தொடர்பாக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக ஊழியர்கள் கூறுகையில், வழக்கம்போல் மதியம் கடல் நீர்மட்டம் சீரானதும் மீண்டும் படகுகள் இயக்கப்படும் என தெரிவித்தனர்.