கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் போராட்டம் நடந்தது.
போராட்டத்தில் மத்திய, மாநில அரசுகளின் உறவுகளை மறு வரையறை செய்திடவும், கூட்டுறவு கூட்டாட்சி தத்துவத்தை பாது காத்திட வேண்டியும், வருமானவரி உச்ச வரம்பை ரூ. 10 லட்சமாக உயர்த்த வேண்டியும், தினசரி ஊதிய முறையை ரத்து செய்திடவும், அரசு துறைகளை தனியார் மயப்படுத்துவதை நிறுத்திட வேண்டும், அரசின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தை அனைத்து அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள், ஒப்பந்த தினக்கூலி ஊழியர்களுக்கு வழங்க உத்தரவாதப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் மிக்கேல் ராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ணன், மாநில பொதுச் செயலாளர் சுபின் மற்றும் பலர் பங்கேற்றனர். முடிவில் மாவட்ட இணைச் செயலாளர் தங்கம் நன்றி கூறினார்.