கன்னியாகுமரி மாவட்டம் அம்மாண்டிவிளை அருகே கீழமுட்டம் பகுதியை சேர்ந்தவர் ரீகன்(42). இவர் மீன்பிடித் தொழில் செய்து வருகிறார். நேற்று முன்தினம் இவர் குளச்சல் பகுதிக்கு தனது புல்லட்டில் சென்று விட்டு அங்கிருந்து மீண்டும் முட்டத்துக்கு புறப்பட்டார். மண்டைக்காட்டை கடந்து புதூர் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது எதிரே மண்டைக்காடு புதூர் சி. ஆர். எஸ் நகரை சேர்ந்த சகாய றாபர்ட்(44) அதே பகுதியை சேர்ந்த ஜெரோமியாஸை(53) பைக்கில் ஏற்றிக் கொண்டு வந்து கொண்டிருந்தார். திடீரென சகாய றாபர்ட் இன்டிகேட்டர் போடாமல் பைக்கை திருப்பியதாக கூறப்படுகிறது. இதனை சற்றும் எதிர்பாராததால் ரீகன் ஓட்டிவந்த பைக்கும், சகாய றாபர்ட் ஓட்டிய பைக்கும் மோதியது. இந்த விபத்தில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர். உடனே அங்கு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் ரீகனை மீட்டு நாகர்கோவில் தனியார் ஆஸ்பத்திரிக்கும், மற்ற இருவரையும் குளச்சல் தனியார் ஆஸ்பத்திரிக்கும் ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் 3 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து ரீகனின் மனைவி பிரஜிஷா மண்டைக்காடு போலீசில் புகார் செய்தார். இதன்பேரில் விபத்து ஏற்படுத்திய சகாய றாபர்ட் மீது மண்டைக்காடு எஸ். ஐ. ஐயப்பன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.