கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் தொகுதிக்குட்பட்ட தேங்காபட்டணம் பகுதியில் இருந்து கருங்கல் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையின் இனயம் திருப்பு என்ற பகுதியிலிருந்து ஹெலன்நகர், இனயம் புத்தன்துறை, ராமன் துறை போன்ற கடற்கரை கிராமங்களுக்கும் ஒரு சாலை திரும்பி செல்கிறது. இந்த சாலைகள் வழியாக அதிக அளவில் வாகனங்கள் இயங்கி வருவதால் எப்பொழுதும் பரபரப்பாக காணப்படுவது வழக்கம்.
இந்த நிலையில் இனயம் திருப்பு மெயின் சாலை பகுதியில் சாலையில் மரண பள்ளம் ஒன்று ஏற்பட்டுள்ளது. அந்த பள்ளத்தில் அடிக்கடி இருசக்கர வாகனங்கள், மற்ற வாகனங்கள் விபத்தில் சிக்கி வருகிறது. அந்த மரணக் குழியை சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதியினர் சம்பந்தப்பட்ட துறையினருக்கு கோரிக்கை விடுத்தனர். ஆனால் கண்டு கொள்ளவில்லை.
மேலும் அந்த குழியிலிருந்து சிதறும் சல்லிகளால் சாலையில் செல்லும் இருசக்கர வாகனங்கள் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது. இதையடுத்து அப்பகுதி இளைஞர்கள் அமத்சியா, செல்வின் மற்றும் யூ டியூபர் நித்தின் உள்ளிட்டோர் நேற்று (செப்.,13) இரவு அந்த சாலையில் சிதறி கிடந்த சல்லிகளை சுயமாக அகற்றி சாலையை சுத்தப்படுத்தினார்கள். ஆனால் அந்த மரண குழியால் மக்கள் அவதிப்பட்டு வருவதுடன், வாகனங்கள் செல்லவும் சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே அந்த அபாய குழியை சீரமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.