கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவி தாக்குதல் நடத்துவதை தடுக்கும் பொருட்டு கடலோர பாதுகாப்பு குழும போலீசார் இந்திய கடல் பகுதிகளை தீவிரமாக தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக ஆப்ரேஷன் சீ விஜில், சஜாக், அம்லா, சாகர் கவாச் என பல்வேறு பெயர்களில் பாதுகாப்பு ஒத்திகைகளை கடல் மற்றும் கடலோர பகுதிகளில் நடத்தி வருகின்றனர்.
இதனையொட்டி இன்று (20-ம் தேதி) காலை "சஜாக் ஆப்ரேஷன் " என்ற ஒரு நாள் கடல் வழி பாதுகாப்பு ஒத்திகையை கடலோர பாதுகாப்பு குழும போலீசார் நடத்தினார்கள். இதனையொட்டி சின்ன முட்டம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து அதிவிரைவு விசைப் படகுகளில் தொலைநோக்கு கருவிகள் உதவியுடன் குமரி கடல் பகுதிகளான ஆரோக்கியபுரம், கோவளம், மணக்குடி வாவத் துறை உட்பட்ட கடற்கரை கிராமங்களையும், அதனையொட்டி உள்ள கடல் பகுதிகளையும் கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் இன்ஸ்பெக்டர் நவீன் தலைமையில் காலை 8 மணி முதல் பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது.
இதில் குமரி கடலில் செல்லும் படகுகளை வழிமறித்து சோதனை செய்வதோடு அவர்களிடம் உரிய ஆவணங்கள் சரி பார்க்கபட்டது. மேலும் அதிநவீன தொலைநோக்கி கருவிகள் மூலம் கடல் பகுதியின் தொலை தூரத்தையும் கண்காணித்து வருகின்றனர். இந்த ஆப்ரேஷன் இன்று மாலை 6 மணி வரை நடைபெற்றது.