மின்சார ரயில் கூரை மீது பயணித்த ஆந்திர வாலிபரால் பரபரப்பு

66பார்த்தது
மின்சார ரயில் கூரை மீது பயணித்த ஆந்திர வாலிபரால் பரபரப்பு
சென்னை கடற்கரையில் இருந்து, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருமால்பூர் வழியாக அரக்கோணம் வரை, மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன.

இதில், கடற்கரையில் இருந்து நேற்று முன்தினம் மாலை 3: 30 மணிக்கு புறப்பட்ட மின்சார ரயில், திருமால்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தது.

காஞ்சிபுரம் நிலையத்திற்கு திருமால்பூர் ரயில் வந்தது. அப்போது, அரக்கோணம் செல்வதற்காக அங்கு நிறுத்தப்பட்ட மற்றொரு ரயிலின் பயணியர், திருமால்பூர் ரயில் கூரையின் மேல் சட்டையின்றி வாலிபர் ஒருவர் படுத்திருப்பதை பார்த்தனர்.

இதையடுத்து, அங்கிருந்த ரயில்வே போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. போலீசார், இரு பெட்டிகளின் இடைபட்ட பகுதி வழியாக ஏறினர். அந்த வாலிபர், மனநலம் பாதிக்கப்பட்டவராக இருந்தார். அவர் ரயிலின் மீது நின்றுவிட்டால் மேலே செல்லும் உயர் அழுத்த கம்பியில் இருந்து மின்சாரம் பாய்ந்து அவர் விபத்தில் சிக்கும் அபாயம் இருந்தது.

இதனால், அந்த வாலிபரிடம் ஒரு மணி நேரம் பேச்சு நடத்திய போலீசார் மற்றும் சக பயணியர், அவரை பத்திரமாக மீட்டனர்.

மீட்கப்பட்ட நபர் தெலுங்கு மொழியில் பேசுவதால், ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவராக இருக்கலாம் என தெரிவித்த போலீசார், செங்கல்பட்டு நிலையத்தில், ரயிலின் கூரை மீது அந்த வாலிபர் ஏறி காஞ்சிபுரம் வரை பயணித்து வந்துள்ளதாகவும் கூறினர். அவர் குறித்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி