மகன் அபகரித்த செட்டில்மென்ட் ஆவணத்தை ரத்து செய்ய வேண்டும் என, காஞ்சிபுரம் கலெக்டரிடம், தந்தை புகார் மனு அளித்துள்ளார்.
வாலாஜாபாத் ராஜ வீதியைச் சேர்ந்த பழனி என்பவர், காஞ்சிபுரம் கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியதாவது:
நான் மரம் வெட்டும் தொழிலை செய்து வந்தேன். இதன் மூலமாக, கிடைத்த வருவாயை கொண்டு, வாலாஜாபாத் ராஜவீதியில், 935 சதுர அடி காலி மனை வாங்கி, மனைவி ஆராயியம்மாள் பெயரில் எழுதினேன்.
இங்கு வீடு கட்டி வசித்து வந்தோம். இந்த வீட்டை என் மகன் ஏழுமலை என்பவருக்கு உயில் எழுதி வைத்தேன். என் மகன், என்னையும், என் மனைவியையும் சரியான முறையில், பேணிகாக்கவில்லை. இதனால், கடந்த மார்ச் மாதம் உயில் ரத்து செய்துவிட்டோம்.
அதே சொத்தினை, ஏழுமலை பெயரில், நாங்களே செட்டில்மென்ட் செய்வது போல, என்னையும் எனது மனைவியையும் மிரட்டி கையெழுத்து பெற்று பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவு செய்து உள்ளார்.
இதை காட்டி, சொத்து முழுதும் எங்களின் பெயரில் உள்ளது. நீங்கள் வெளியே செல்லலாம் என, என்னையும், என் மனைவியையும் மகன் மிரட்டி வருகிறார்.
மாடியில் வசித்து வரும் நாங்கள், எங்கே செல்வது என, தெரியவில்லை. மேலும், என் மனைவிக்கு உடல் நிலை சரியில்லாத காரணத்தால், வெளியே செல்ல முடியாத சூழ்நிலை உருவாகி உள்ளது.
எனவே, என் மகன் மிரட்டி எழுதி வாங்கிய செட்டில்மென்ட் ஆவணத்தை ரத்து செய்து கொடுக்க வேண்டும்.