அடிக்கடி பழுதாகும் கணினி; தடுமாறும் கலெக்டர் 'ஆபீஸ்'

56பார்த்தது
அடிக்கடி பழுதாகும் கணினி; தடுமாறும் கலெக்டர் 'ஆபீஸ்'
அரசு அலுவலகங்களில் காகித கோப்புகளை குறைக்க, தமிழக அரசு 'இ- ஆபிஸ்' திட்டத்தை கொண்டு வந்துள்ளது. காகித கோப்புகளை குறைத்து, கணினி வாயிலாகவே கோப்புகளை கையாள வேண்டும் என்றும், அனைத்து கோப்புகளும் டிஜிட்டலாக மாற, இத்திட்டத்தை அரசு தீவிரமாக செயல்படுத்திவருகிறது. இதற்கான அடிப்படை தேவையாக கணினி பயன்பாடு உள்ளது. ஆனால், பல்வேறு அரசு அலுவலகங்களில் கணினி பயன்பாடு, பராமரிப்பு மோசமாக உள்ளது.

குறிப்பாக, காஞ்சிபுரம்கலெக்டர் அலுவலகத்தில், ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள கணினிகளுக்கு, யு.பி.எஸ். எனப்படும் பேட்டரி வசதிகள் இல்லாமல் உள்ளது. இதனால், மின் தடை நேரத்தில், கணினிகள் திடீரென நிறுத்தப்படுவதும், அவை அடிக்கடி பழுதாவதும் தொடர்கிறது. இந்நிலையில், வருவாய் துறையிலிருந்து காஞ்சிபுரம் கலெக்டர்அலுவலகத்திற்கு, புதிதாக 40 கணினிகள்வழங்கப்பட்டுள்ளன.

இவற்றை பத்திரமாக பயன்படுத்தவும், பராமரிக்கவும் தேவையான பேட்டரி வசதிகள், கலெக்டர் அலுவலகத்தில் இல்லை என, அரசு ஊழியர்கள் புலம்புகின்றனர். ஏற்கனவே உள்ள ஜெனரேட்டர் வசதி, கலெக்டர் அலுவலக அறைக்கும், டி. ஆர். ஓ. அலுவலக அறைக்கும் மட்டுமே உள்ளது. கலெக்டர் அலுவலகம் முழுமைக்கும் பேட்டரி வசதி இல்லை.

மின் தடை நேரத்தில் கணினிகளை பயன்படுத்த தேவையான பேட்டரி வசதிகள் இல்லாதது பெரும் குறையாகவே உள்ளதாக, அரசு ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி