வடகிழக்கு பருவமழை காலம் துவங்கும் அக். , மாதம் முதல் டிச. , மாதம் வரை, வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை, மண்டலம், புயல் ஏற்படும். அப்போது, கடலில் அலைகளின் சீற்றம் அதிகரிக்கும். அதனால், கடலரிப்பும் அதிகரித்து, கடல்நீர் நிலப்பகுதியில் புகும். தற்போதும் பருவமழைக் காலம் துவங்கி, காற்றழுத்த தாழ்வுநிலை ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, செங்கல்பட்டு மாவட்டத்தில், கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், வழக்கத்திற்கு மாறாக, 30 மீட்டர் அளவிற்கு கடல் உள்வாங்கியே காணப்படுகிறது. கடலிலும் அலைகள் அதிகம் தோன்றாமல், சீற்றமின்றி குளம் போலவே காணப்பட்டது. கரையில் மட்டும் அலைகள் தவழ்ந்தன.
இதுகுறித்து, மீனவர்கள் கூறியதாவது:
கடலில் புயல் ஏற்பட்டால், சுரப்புடன் இருக்கும். கடற்கரையில் நாம் நிற்கவே முடியாத அளவிற்கு, பலத்த சூறாவளி காற்றும் வீசும். அதற்கான அறிகுறிகள் தற்போது இல்லை. அலையும் குறைந்து குளம் போல் தான் உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.