செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் நிரந்தர கடைகள் மற்றும் நடைபாதை கடைகள் ஆகியவை, பிரதான போக்குவரத்து சாலைகளை ஆக்கிரமித்துள்ளன.
தற்போது, வாகன போக்குவரத்து அதிகரித்துள்ள நிலையில், ஆக்கிரமிப்புகளால் சாலைகள் குறுகி, வாகனங்கள் எளிதில் செல்ல முடியாமல், நெரிசலில் சிக்கி போக்குவரத்து முடங்குகிறது.
இப்பகுதி ஆக்கிரமிப்புகளை, சப் - கலெக்டர் நாராயணசர்மா பார்வையிட்டு, ஆக்கிரமிப்புகளை அகற்ற, பேரூராட்சி, நெடுஞ்சாலை உள்ளிட்ட துறையினருக்கு உத்தரவிட்டார்.
நேற்று (செப்.21) முதல், புறவழி சந்திப்பு பகுதியிலிருந்து, சாலை ஆக்கிரமிப்புகள் அதிரடியாக அகற்றப்பட்டு வருகின்றன. இரண்டாம் நாளாக, நேற்றும் இந்நடவடிக்கை தொடர்ந்தது.
கோவளம் சாலையில் உள்ள கடைகளின் ஆக்கிரமிப்புகள், பொக்லைன் இயந்திரம் வாயிலாக அகற்றப்பட்டன. அப்போது, இதுகுறித்து, ஏன் முன்னதாக தகவல் தெரிவிக்கவில்லை என கேட்டு, கடைக்காரர்கள் தகராறு செய்தனர்.
இதுகுறித்து, வியாபாரிகள், ஹோட்டல்கள் உள்ளிட்ட சங்க பிரதிநிதிகளுடன் கூட்டம் நடத்தி, அனைவருக்கும் தகவல் தெரிவிக்க அறிவுறுத்தியதாக, பேரூராட்சி நிர்வாகத்தினர் விளக்கி, தொடர்ந்து ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.
அதை கண்ட ஆக்கிரமிப்பாளர்கள், வேறு வழியின்றி, தாங்களே அகற்ற தொடங்கினர். இந்நடவடிக்கை, அறிவிப்புடன் நின்றுவிடும் என கருதிய வியாபாரிகள் சங்கத்தினர், மற்றவர்களுக்கு இதுகுறித்து தெரிவிக்காமல் அலட்சியப்படுத்தியதாக தெரிகிறது.